டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் 18 அரசியல் கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று (டிச8) பாரத் பந்த் நடைபெறும் நிலையில் அதுகுறித்து பார்க்கலாம்.
- டிசம்பர் 8 ம் தேதி விவசாயிகள் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மூன்று வேளாண் சந்தைப்படுத்தல் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டங்களுக்கு தங்களது முழு ஆதரவையும் தருவதாக பல கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சீதாராம் யெச்சூரி, டி ராஜா மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் டிசம்பர் 8ஆம் தேதி பாரத் பந்திற்கு "முழு மனதுடன்" ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
- இதுதவிர கட்சித் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில், இந்தப் புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், இந்தச் சட்டங்கள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
- இந்தச் சட்டங்கள் "குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் இந்திய விவசாயத்தையும் சந்தைகளையும் பன்னாட்டு வேளாண் வணிக நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அடமானம் செய்வதற்கு அடிப்படையை அமைகின்றன.
- சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக கூட்டாளிகளான அசாம் கண பரிஷத் மற்றும் ராஜஸ்தானின் ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி ஆகிய கட்சிகளும் பாரத் பந்த் போராட்டத்தில் இணைந்துள்ளன. எனினும், அவர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை.
- இதற்கிடையில், பல வங்கி தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசாங்கம் முன் வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
- அலுவலர் தொழிற்சங்கங்கள் அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் (AIBOA) மற்றும் இந்திய தேசிய வங்கி அலுவலர்கள் காங்கிரஸ் (INBOC) ஆகியவையும் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஏக மனதாக ஆதரவு அளித்துள்ளன.
- புதிய சட்டங்களான உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 மற்றும் அத்தியாவசிய பொருள்கள் (திருத்தம்) ஆகிய மூன்று புதிய சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
- இந்தச் 2020ஆம் ஆண்டு சட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) அகற்றுவதற்கான வழி வகுக்கும். அது பெரிய நிறுவனங்களின் தயவில் அவர்களை விட்டுச்செல்லும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இதையும் படிங்க : விவசாயிகளுக்கு ஆதரவு; நாடு தழுவிய முழு அடைப்புக்கு திராவிடர் கழகம் ஆதரவு!