ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. அத்துடன் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப் பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
இதற்கு முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, அம்மாநிலத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே, பிரிவினைவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், 112 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 178 பிரிவினைவாதிகளும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 39 வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவி மக்கள் 36 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறை சம்பவங்களில் இருந்து 50 "AK 47" துப்பாக்கிகள் உட்பட 77 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு முழுவதுமே 71 ஆயுதங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து, உபா சட்டத்தின் கீழ் 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு கருதி, முன்னாள் முதலமைச்சர்கள் மெஹ்பூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனிடையே உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்னதாக, வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி, தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமர் கோயில் கட்டுமானம் தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும் - பிரியங்கா காந்தி