உத்தர பிரதேசம் மாநிலம் முஷாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராகேஷ் - தீயா தம்பதியினர். இவர்களுக்கு ஷீலா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16ஆம் தேதி ஷீலா தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ஷீலாவை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து ஷீலாவின் பெற்றோர் முஷாபர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், முஷாபர்நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்தார். இதைக் கண்ட காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், பாக்ரா பகுதியைச் சேர்ந்த மகாதேவ் (21) என்பதும் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகாதேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:யூ-ட்யூப் பார்த்து கள்ளச்சாராயம் தயாரிப்பு: நால்வர் கைது