ஐம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதையடுத்து, அதிகாரப்பூர்வமற்ற ஐரோப்பிய குழுவினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இது சர்ச்சையாக வெடித்த நிலையில், அதன் பின்னர் சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அமெரிக்க, நார்வே ஆகிய நாடுகளின் குழுவினர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஆய்வு நடத்துகின்றனர்.
துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு
இதில் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், நார்வே தூதர் ஹன்ஸ் ஜேக்கப் ஃப்ரைடென்லன்ட் என 15 முக்கியப் பிரதிநிதிகள் உள்ளனர். இந்தக் குழுவினர் தங்களின் முதல் பயணமாக டெல்லியிலிருந்து இன்று (ஜன. 9) ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
ஸ்ரீநகர் செல்லும் இந்தக் குழுவினர் அங்குள்ள உள்ளூர் மக்களை முதலில் சந்திக்கின்றனர். அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆய்வு நடத்துகின்றனர். இதையடுத்து நாளை (ஜன. 10) அங்கிருந்து புறப்பட்டு காஷ்மீர் செல்லுகின்றனர். அங்கு அவர்கள் துணைநிலை ஆளுநர் ஜி.சி. முர்மு உள்பட மேலும் சில உயர் அலுவலர்களைச் சந்திக்கிறார்கள்.
இதுபற்றி தற்போது அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகி உள்ளது. அந்தத் தகவலில், “டெல்லி தூதர்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதில் 15 பேர் கொண்ட தூதுக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் யூனியனுக்கு ஜனவரி 9, 10ஆம் தேதிகளில் வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது” எனக் கூறப்பட்டுள்ளது.
குழுவின் சிக்கலான கேள்விகள்
ஜம்மு காஷ்மீர் யூனியனுக்குச் சென்றுள்ள இக்குழுவில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கர்கள் பெரும்பாலும் காணப்படுகின்றனர். அதில் அமெரிக்கா, மொராக்கோ, கயானா, பிஜூ, டோகோ, பிரேசில், நைஜர், நைஜீரியா, அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், நார்வே, மாலத்தீவு, வியட்நாம், பெரு, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உள்ளனர்.
இந்தக் குழுவின் ஆய்வுக்கு பின்னர் வெளியுறவுத் துறையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகலாம். முன்னதாக டெல்லியிலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அமெரிக்க, நார்வே உறுப்பினர்கள் சிக்கலான கேள்விகளை எழுப்ப உள்ளனர். இதுமட்டுமின்றி மற்றொரு நாளில் ஐரோப்பிய குழுவினர் தனியாக அல்லது குழுவாக ஆய்வு நடத்தலாம்.
அப்போது அவர்களுக்கு சில வரைமுறைகள் தளர்த்தப்படவும் வாய்ப்புள்ளது. வீட்டுக் காவலிலுள்ள முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரையும் அவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய குழுவினரை காஷ்மீருக்கு அழைத்துச் செல்ல விரும்பினோம் என அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் அழுத்தம்
மேலும், “இந்தத் திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. அரசின் முயற்சியை ஐரோப்பியக் குழுவினர் வரவேற்றனர். அவர்கள் ஜம்மு காஷ்மீரை பார்வையிட விரும்பினார்கள். தடுத்துவைக்கப்பட்டுள்ள எந்தவொரு அரசியல் தலைமையையும் சந்திக்க எந்த ஐரோப்பிய ஒன்றிய தூதரும் குறிப்பிட்டு கேட்கவில்லை” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுநர் வட்டாரங்கள், “ஐரோப்பிய குழுக்கள் மக்களிடையே இயல்பாகக் கருத்துகளைக் கேட்டறிந்தனர். எனினும் வீட்டுக் காவலில் உள்ளவர்களைச் சந்திக்க வேண்டும் என்று எந்தவொரு தூதரும் தனிப்பட்டமுறையில் விருப்பம் தெரிவிக்கவில்லை” என்று கூறுகின்றன.
எனினும் உண்மைத் தகவல்கள் வேறுவிதமாக கூறுகின்றன. ஜம்மு காஷ்மீர் யூனியனுக்கு கடந்த அக்டோபர் மாதம் பயணம்செய்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரில் பெரும்பாலும் வலதுசாரிக் கொள்கை கொண்டவர்கள் அதிகம். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனெனில் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட ஐரோப்பிய அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு எதிராக அரசியல் அழுத்தம் கொடுத்தனர். இதனை எதிர்கொள்ள இம்மாதிரியான அரசியல் பயணம் நடந்ததாகவும், வருங்காலங்களிலும் இது தொடரும் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீர் அரசியலை தோலுரிக்கும் 'ஷிகாரா'