டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்த இருவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இரண்டு அலுவலர்களும், இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த விவகாரத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான், இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் டி பிரம்மா, பால் செல்வதாஸ் ஆகிய இரண்டு சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில் பாதுகாப்புப் படை) பணியாளர்கள் கடந்த ஜூன் 22ஆம் தேதி விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்தாக பாகிஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், மத்திய அரசு இருவரையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, 12 மணி நேரத்திற்குப் பிறகு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த ஜூன் 23ஆம் தேதி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பாதியாக குறைத்துக் கொள்ளும்படி பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த 143 அலுவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேற்று அட்டாரி, வாகா எல்லைப் பகுதிகள் வழியாக தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பினர். அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலர்கள் 38 பேர், இன்று அட்டாரி வாகா எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குத் திரும்ப உள்ளனர்.