பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதிலும் குறிப்பாக உடலில் சர்க்கரை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் கொண்ட வயதானவர்கள், இத்தொற்றிலிரந்து குணமடையும் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது.
இந்தச் சூழலில், அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி தற்போது கரோனா வைரசிலிருந்து முழுமையாக குணமடைந்த சம்பவம் அனைவருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலைச் சேர்ந்தவர் ரபியா அகமத். இவர் நொய்டாவில் உள்ள தனது பேரன், பேத்திகளைப் பார்ப்பதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வந்துள்ளார். கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இவர் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 16ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. ஏற்கனவே அல்சீமர் நோயுடன் போராடிக் கொண்டிருந்த இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மூச்சுவிடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் வெண்டிலேட்டர் உதவியுடன் கடந்த ஏழு நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் பலனாக, கடந்த வியாழக்கிழமை (ஜூலை 30) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால் அவர் அடுத்த நாளே மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் கரோனாவை வென்ற 105 வயது மூதாட்டிக்கு மருத்துவர்கள் பூங்கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து மருத்துவர் அசுதோஷ் நிரஞ்சன் கூறுகையில், “ரபியா அகமத் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, அவருக்கு காய்ச்சல், கடுமையான மூச்சுத்திணறல் இருந்தது. அவருக்கு ஏற்கனவே அல்சீமர் நோய் இருந்ததால், அவரால் உறவினர்களைக்கூட அடையாளம் காணமுடியவில்லை. அவருக்கு சிறுநீரகப் பாதிப்பும் இருந்தது. இதனால் அவரது உடல்நலம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வென்டிலேட்டர் உதவியுடன் 7 நாள்களாகச் செயற்கை சுவாசம் பெற்றுவந்த அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவரால் மருத்துவர்களையும் உறவினவர்களையும் அடையாளம் காணமுடிகிறது” என்றார்.