பெங்களூரு (கர்நாடகா): பெங்களூரு நாகர்பாவியில் ரேபிட் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூடம் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நடைபெற்றது. இதில் மைசூரை சேர்ந்த 23 வயதான வீரர் நிகில் கலந்து கொண்டார்.
நிகிலுக்கும் மற்றொரு வீரருக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, எதிராளி நிகிலை தாக்கினார். இதில் நிலைகுலைந்த நிகில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகிலின் பெற்றோர் ஞானபாரதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், போட்டி ஏற்பாட்டாளரின் அலட்சியத்தால் தங்கள் மகன் இறந்ததாக புகார் அளித்துள்ளனர். மேலும், போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை என புகார் தெரிவித்தனர். இதனிடையே போட்டி ஏற்பாட்டாளர் நவீன் ரவிசங்கர் தலைமறைவாகியுள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி!