கர்நாடகா: கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அந்த இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்தார். இளம்பெண்ணின் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் சென்று அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி, தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், முகத்தில் ஆசிட் அடித்துவிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டியதுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அந்த இளம்பெண் நாகேஷின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், இளம்பெண் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தனியார் ஆசிரமத்திற்கு நாகேஷ் அடிக்கடி தியானத்திற்கு வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி இன்று(மே 13) போலீசார் மாற்று உடையில், தியான மண்டபத்திற்குள் நுழைந்து, காளி வேடம் அணிந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த நாகேஷினை கைது செய்தனர். பின்னர் அவரை கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் தனியார் ஆசிரமத்திற்குள் நுழைந்து அதிரடியாக கைது செய்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.