டெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு, செப்டம்பர் 19ஆம் தேதி, டெல்லி ஜாமியா நகர் பட்லா ஹவுஸில் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது. இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு எதிராக காவல்துறையினர் என்கவுண்டர் நடத்தியதாகக் கூறப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து, பட்லா ஹவுஸில் பயங்கரவாதிகள் மறைந்து கொண்டிருப்பதாக டெல்லி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்போது, மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் அதிஃப் அமீன், முகமது சாஜித் ஆகியோர் கொல்லப்பட்டனர். துரதிருஷ்டவசமாக, காவல் ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா இந்த என்கவுன்டரின்போது கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து, பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் ஆரிஸ் கான், ஷாசாத், ஜூனைத் ஆகியோர் தப்பி ஓடினர். முகமது சைஃப் காவல்துறையிடம் சரணடைந்தார். இதையடுத்து, ஷாசாத் உத்தரப்பிரதேசத்திலும், ஆரிஸ் கான் இந்திய நேபாள எல்லையிலும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், மோகன் சந்த் சர்மாவை ஆரிஸ் கான் கொலை செய்தது நிரூபணமானது. இந்நிலையில், ஆரிஸ் கானுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அவருக்கு 11 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பயங்கரவாதி!