அயோத்தி (உத்தரப் பிரதேசம்): ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயிலில் கட்டுமானப் பணிகள் முடிவடைய உள்ள நிலையில், ஜனவரி 22ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகத்திற்கான நாள் குறிக்கப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் நிர்வாக அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா (Shri Ram Janmabhoomi Teerth Kshetra trust), ராமர் கோயிலின் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ராமர் கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் நிறுவப்பட்டுள்ள யானை, சிங்கம், கருடன், அனுமான் ஆகிய சிலைகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த சிலைகளை வடிக்க தேவையான இளஞ்சிவப்பு நிற மணல் கற்கள், ராஜஸ்தான் மாநிலத்தின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள படிக்கட்டுகளின் பக்கவாட்டில், இந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கான தேதி நெருங்கி வரும் நிலையில், ஜனவரி 15ஆம் தேதி முதல் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்க உள்ளது. இதனால் கோயிலை கட்டிவரும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் கட்டுமான பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்க ஏற்பாடு!