புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில், டிசம்பர் 11ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்து, 23 மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருது, சான்றிதழ்களுடன் ரூ.10 ஆயிரம் வழங்கினர். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
அப்போது விழா மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “நான் உங்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்கமாட்டேன், சிறப்புத் திறனாளிகள் என்றுதான் அழைப்பேன். உங்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன். கருவிலேயே குழந்தைகளின் குறையை சரிசெய்ய வேண்டும் என விரும்பி, அதற்கான படிப்பை நான் படித்தேன்.
பிரதமர் பாரா ஒலிம்பிக்ஸ் மூலம் பலரை ஊக்கப்படுத்தியுள்ளார். இதனால் 111 தங்கங்களை நமது வீரர், வீராங்கனைகள் பெற்றுள்ளனர். சிறுவயதிலிருந்தே பாரா ஒலிம்பிக்ஸ் அனுப்பும் வகையில் முழுமையான பயிற்சியை அரசு அளிக்க வேண்டும். மத்திய அரசு சிறப்பு அடையாள அட்டை வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: ஆழியார் ஆற்றிலிருந்து அம்பராம்பாளையம் பகுதிக்கு நிறம் மாறி வந்த குடிநீர்.. காய்ச்சி குடிக்க மாநகராட்சி தலைவர் அறிவுறுத்தல்!
புதுச்சேரி அரசு அதிகாரிகள் இந்த அட்டையைப் பெற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மத்திய அரசின் பல சலுகைகளைப் பெற முடியும். எந்த பயிற்சி கொடுத்தாலும் சிறப்புத் திறனாளிகள் கற்றுக் கொள்வார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. சிறப்புத் திறனாளிகளுக்கு உதவி செய்ய அரசு எந்த முயற்சி எடுத்தாலும், பக்கபலமாக இருப்பேன். உங்களுக்கு எல்லா வகையிலும் அரசு துணைபுரியும்" என்று கூறினார்.
முன்னதாக விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தி வருவதாகவும், செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரும் ஜனவரி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். மேலும், 40 சதவீத ஊனமடைந்தவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு மிகுந்த கவனமாக உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஆருத்ரா முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” - இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் ஆர்.கே.சுரேஷ்!