கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் ஓடும் ரயிலில் இருந்து சக பயணி தள்ளிவிட்டத்தில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். கண்ணூர் - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (பிப். 4) வடகரா அருகே சென்றுகொண்டிருக்கும்போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும், கேரளாவைச் சேர்ந்த முஃதூர் இஸ்லாம் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது முஃதூர் இஸ்லாம் விவேக்கை படிகட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் தண்டவாளத்தில் விழுந்த விவேக் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து சகப்பயணிகள் முஃதூரை பிடித்து வைத்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் முக்காலி ரயில் நிலையத்தில் வைத்து முஃதூர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே விவேக்கை மீட்க சென்ற போலீசார் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதன்பின் அவரது உடலை உடற்கூராய்வுக்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட தகவலில் விவேக் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் சென்ட்ரல் அருகே வந்துகொண்டிருந்தபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோனி (24) என்பவர் ரயில் படிக்கட்டுக்கு அருகே அமர்ந்து செல்போனில் வீடியோ பார்த்துவந்துள்ளார்.
அந்த நேரத்தில், தண்டவாளத்துக்கு அருகே கீழே நின்று கொண்டிருந்த சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் திடீரென ரோனியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது செல்போன் கீழே விழுந்துள்ளது. இதனால் ரோனி செல்போனை பிடிக்க கீழே குதித்தபோது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காக்கா முட்டை பட பாணியில் ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு.. வட மாநில இளைஞர் உயிரிழப்பு..