மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் மஸ்ருல் ஷிவ்ராவில் தனியார் பெண்கள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 13 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளும் உள்ளனர். இவர்களில் 14 வயது சிறுமி ஒருவர் காப்பக உரிமையாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மஸ்ருல் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில் காப்பக உரிமையாளர் 2018ஆம் ஆண்டு முதல் 5 சிறுமிகளை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் போலீசார் காப்பக உரிமையாளரை நள்ளிரவு (நவம்பர் 26) கைது செய்தனர். அவர் மீது போக்சோ, குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் கிரண் குமார் சவான் கூறுகையில், காப்பகத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. காப்பக உரிமையாளர் சிறுமிகளை மிரட்டியும், ஆசை வார்த்தை கூறியும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிரியையை கிண்டல் செய்து, சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட மாணவர்கள்