சாந்தியடைந்த நிர்பயாவின் ஆன்மா
2012 டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் நிர்பயா சம்பவம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தன.
இது குறித்து நிர்பாயாவின் தாயார் ஆஷா தேவி ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், "2012ஆம் ஆண்டு மோசமான மிருகத்தனத்தை அனுபவித்த எனது மகள் நிர்பயாவின் ஆன்மா, ஏழு ஆண்டுகள் காத்திருந்தபின், அவளைத் துன்புறுத்தியவர்கள் தூக்கிலிடப்பட்ட உடன் சாந்தியடைந்தது.
அம்மா தண்ணீர்...
எனது மகள் அந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின் 12 நாள்கள் உயிருடன் இருந்தாள். வலியால் துடித்தாள். அடிக்கடி என்னிடம் அம்மா தண்ணீர்... எனக் கேட்டுக்கொண்டே இருப்பாள்.
ஆனால் மருத்துவர்கள், அவளின் உடலின் முழு அமைப்பும் செயல்படாததால் தண்ணீர் கொடுக்கக் கூடாது எனக் கூறினர்.
அதனால், அவளுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கொடுக்க முடியாத பெரும் துயரநிலைக்குத் தள்ளப்பட்டேன். இப்போதும் நான் தண்ணீர் அருந்தும்போது அந்த நினைவுகள் இதயத்தை நொறுக்குகிறது.
அனைவருக்கும் நன்றி
என் மகளுக்கான நீதிக்கு ஆதரித்த அனைவருக்கும் நன்றி. சிறுவர்கள், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாலையில் வந்து எனது மகளுக்காக குரல் எழுப்பினர். அதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
இந்தச் சூழலில் மக்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். எல்லா சூழ்நிலைகளிலும் பெண்களுக்குத் துணையாக நாம் நிற்பது அவசியம். அவர்களுக்கான நமது குரல் ஒருபோதும் நின்றுவிடக் கூடாது.
இனியொரு நிர்பயா சம்பவம் வேண்டாம்
எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது என நான் நின்றுவிட விரும்பவில்லை. பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதி கிடைக்கும்வரை போராடுவேன். மக்களும் அதைச் செய்ய வேண்டும்.
பெண்களுக்கெதிரான சிறிய குற்றங்களில்கூட நாம் கவனம் செலுத்த வேண்டும். இனியொரு நிர்பயா நீதிக்காகப் போராடும் சூழலை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிர்பயா உயிரிழந்து 8 ஆண்டுகள் நிறைவு: இந்தாண்டில் அக். மாதம் வரை 1,429 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு!