சென்னை: சமீபத்திய ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் (ASER - Annual Status of Education Report) படி 25 சதவீத பதின்ம வயதினர் இரண்டாம் வகுப்பு உரையை சரளமாக படிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 14 முதல் 18 வயதுடைய மாணவர்களில் எத்தனை பேரால் இரண்டாம் வகுப்பு பாட உரையை படிக்க முடியும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற ஆய்வு கடைசியாக 2017 இல் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
இதில் கூடுதலாக பெரம்பலூர் மாவட்டத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் 14 முதல் 18 வயதுடைய 97.2 சதவீத பதின்ம வயதினரே கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அவர்களில் 70.3 சதவீதம் பேர் அரசு நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். 2.8 சதவீத பதின்ம வயதினர் எந்த கல்வி நிறுவனத்திலும் சேரவில்லை.
அவர்களால் இரண்டாம் வகுப்பு பாட உரையை படிக்க முடிகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 21.4 சதவீதம் மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாட உரையை படிக்க முடியவில்லை. மேலும் இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் 25 சதவீதம் பதின்ம வயதினருக்கு படிக்க தெரியாது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பெரம்பலூரில் 14 முதல் 18 வயதுடையவர்களில் 78.3 சதவீதம் பேரால் குறைந்தபட்ச ஆங்கில வாக்கியங்களை படிக்க முடியும்.
79.4 சதவீத பேரால் இரண்டாம் வகுப்பு பாட உரையை படிக்க முடிந்தது. இந்த ஆய்வில் சிறுமிகளை விட சிறுவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் 72.7 சதவீதம் பேர் ஸ்டெம் படிப்புகளில் சேர்ந்து படித்து வருவதும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. பெரம்பலூரில் பெரும்பாலான பெண்கள் (44%) நர்சிங் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளிலும், ஆண்கள் (CZ7) பொறியியல் படிப்புகளிலும் சேர்ந்து படித்துள்ளனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பெரம்பலூரில் 92.3 சதவீத இளைஞர்களது வீட்டில் ஸ்மார்ட் போன் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 98.1 சதவீத இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியும். இது சிறுவர்கள் மத்தியில் 98.7 சதவீதமாகவும், சிறுமிகள் மத்தியில் 97.9 ஆகவும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தக்கூடியவர்களில் 31.2 சதவீதம் பேர் சொந்தமாக ஸ்மார்ட் போன் வைத்துள்ளதாகவும் உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 68.3 சதவீத பதின்ம வயதினருக்கு டிஜிட்டல் வேலைப்பாடுகள் தெரிந்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் அதிகரிக்கும் கடன் இடைவெளி! அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?