டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். கடந்த ஆண்டு மே மாதம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை சிறை கழிவறைக்கு சென்ற சத்யேந்திர ஜெயின், மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூச்சு திணறல் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, உடல் நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சத்யேந்திர ஜெயின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ஜிபி பந்த் மருத்துவமனையில் செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயினின் உடல் பரிசோதனை அறிக்கையை சமர்பித்தார். மேலும் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என வாதாடினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, சத்யேந்திர ஜெயினின் மருத்துவ அறிக்கைகளை எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி சத்யேந்திர ஜெயின் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.
வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேநேரம் சாட்சிகளை கலைக்க கூடாது, டெல்லியை விட்டு வெளியே செல்லக் கூடாது என நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம், தனக்கு விருப்பமான மருத்துவமனையில் ஜெயின் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் அனுமதி அளித்தது.
அதன்படி, தற்போது அவர் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று (மே 28) முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்த புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், "தைரியமான மனிதர்... ஹீரோவை சந்தித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் 2017ம் ஆண்டு மே 31ம் தேதி வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.