இந்திய ராணுவத்திற்கு வீரர்களைச் சேர்ப்பதற்கான பொது நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் குறித்து புனே நகரக் காவல் துறை, ராணுவ நுண்ணறிவு அமைப்பினர் இணைந்து கூட்டாக விசாரணை மேற்கொண்டனர். இதில், முன்னாள் ராணுவ அலுவலர்களின் தொடர்பு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், ராணுவத்தில் பணி உறுதி என்ற வாக்குறுதியில் லட்சக்கணக்கில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கு விசாரணை புனேவில் கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.ஆர்.நவந்தர் தலைமையில் நடந்து வருகிறது. அப்போது புனே காவல் துறை தரப்பில் கூறியதாவது, "தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் டி முருகன் என்பவர், வினாத்தாளை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு வினாத்தாளை யார் அனுப்பினர் என்பது தெரியவில்லை. அவரது செல்போனில் அனைத்து கலந்துரையாடலும் டெலிட் செய்யப்பட்டுள்ளதால், சைபர் கிரைம் காவல் துறையினர் தகவல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளனர். மேலும், அவரது வங்கிக் கணக்குகளைச் சோதனை செய்யவுள்ளோம். எனவே, அவரை காவல் துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் முருகன் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுவதால், அவரை மார்ச் 15ஆம் தேதி காவல் துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடுகிறேன் எனத் தீர்ப்பளித்தார். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை மூன்று ராணுவ வீரர்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் தினத்தில் குதிரையில் சட்டப்பேரவைக்கு வந்த எம்எல்ஏ