மும்பை : பாகிஸ்தான் பெண் உளவாளியின் நிர்வாணப் புகைப்படங்களுக்குப் பதிலாக பிரம்மோஸ் மற்றும் அக்னி ஏவுகணைகள் குறித்த ரகசியங்களை டிஆர்டிஓ இயக்குநர் மற்றும் மூத்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் வழங்கியதாக பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஓ ஆய்வகத்தின் இயக்குநர் மற்றும் மூத்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்குத் தகவல் கசியவிட்டதாக கூறி பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ் உள்ளிட்ட குழுக்களுடன் பிரதீப் குருல்கர், ஈமெயில், வாட்ஸ் அப் உள்ளிடவை மூலம் தொடர்பில் இருந்ததாக பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பாகிஸ்தன் பெண் உளவாளியின் நிர்வாணப் புகைப்படங்களுக்கு கைமாறாக பிரம்மோஸ் மற்றும் அக்னி உள்ளிட்ட ஏவுகணை தகவல்களை கசியவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பிரதீப் குருல்கர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்ததாகவும்; பாகிஸ்தானுக்கு சென்று இருக்கக் கூடுமோ என விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தான் பெண் உளவாளிகளுடன் பிரதீப் குருல்கர் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக உளவு அமைப்புகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்து உள்ளனர். பிரதீப் குருல்கரின் லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி தடயவியல் ஆராய்ச்சி அனுப்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக டிஆர்டிஓ அதிகாரிகள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்ட நிலையில், அதில் பிரதீப் குருல்கர், ஏவுகணை ரகசியங்களை கசியவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன் மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து அவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
பிரதீப் குருல்கர், பாகிஸ்தானிய உளவு அமைப்பைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததுடன், வாட்ஸ்அப் செய்திகள், குரல் மற்றும் வீடியோ கால்கள் வழியாகவும் ரகசிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வரும் நவம்பர் மாதத்தில் பிரதீப் குருல்கர் ஓய்வுபெற இருந்த நிலையில் இந்த பிரச்னையில் சிக்கி உள்ளார். மேலும் அவரிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தல் என வதந்தி... விவிபாட், வாக்கு இயந்திரங்களை வீதியில் வீசி மக்கள் கலவரம்!