புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தின் பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் மிலியாகோவ் செர்ஜி என்ற ரஷ்யரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்பி அல்ட்னா என்னும் சரக்கு கப்பல் பாரதீப் வழியாக மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள துறைமுகத்துக்கு செல்லவிருந்தது.
இந்த கப்பலில் ரஷ்யா நாட்டை சேர்ந்த மிலியாகோவ் செர்ஜி என்பவர் தலைமைப் பொறியாளராக இருந்தார். இந்த கப்பல் நள்ளிரவில் பாரதீப் துறைமுகத்துக்கு வந்து, நங்கூரமிடப்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் மிலியாகோவ் செர்ஜி உயிரிழந்து கிடப்பதை சக பொறியாளர்கள் பார்த்துள்ளனர். அதன்பின் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் போலீசார் கப்பலுக்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாருடன் மருத்துவர்களும் சென்றுள்ளனர். முதல்கட்ட தகவலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறைக்கும், பொறியாளரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஒடிசாவுக்கு சுற்றுலா வந்த பவெல் ஆன்டொனோவ் (65) என்பவர் டிசம்பர் 24ஆம் தேதி தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அதேபோல அவரது நண்பரும், ரஷ்ய தொழிலதிபருமான விளாடிமிர் பிடெனோவ் (61) டிசம்பர் 22ஆம் தேதி தங்கியிருந்த ஹோட்டலில் இறந்து கிடந்தார். இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் மேலும் ஒரு ரஷ்யர் ஒடிசாவில் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அறிவியல் தற்சார்பை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி