மும்பை: எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்திற்கு (சிஏசிபி) சுயாட்சி வழங்குதல் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், உண்ணாவிரதம் இருக்கப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு அன்னா ஹசாரே கடந்த 14ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, "கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்காகப் போராட்டங்களை நடத்திவருகிறேன். ஆனால் அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு எதுவும் செய்யவில்லை.
அரசு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே தருகிறது. இதன் காரணமாக அரசு மீது கொண்டிருந்த நம்பிக்கை போய்விட்டது. எனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் கோரியுள்ளனர். ஜனவரி இறுதிவரை அதற்கான நேரம் உள்ளது.
எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நான் எனது போராட்டத்தை மீண்டும் தொடங்குவது கட்டாயம். இது எனது கடைசிப் போராட்டமாகவும் இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாய அமைப்புகளின் அழைப்புகளை ஏற்று பாரத் பந்திற்கு ஆதரவாக டிசம்பர் 8ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை பாஜகவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான ஹரிபாவ் பாகடே சமீபத்தில் ஹசாரேவை சந்தித்து, மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தில் இணையும் அன்னா ஹசாரே!