குண்டூர்: ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூரில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட பொருட்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியத்துக் கொண்டனர். இதனால், ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் பலருக்கு மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த புதன்கிழமை கண்டுகுரு பகுதியில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் இதேபோல் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் உதவித் தொகையை சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ரூ.1.35 கோடி மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல் - கடலோர காவல் படை அதிரடி!