சித்தூர் : ஆந்திராவில் முதல் முறையாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆலயத்துடன் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மொழியில், “நவரத்னலு ஆலயம்” என்று அழைக்கப்படுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி நவரத்னலு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து அவருக்கு உள்ளூர் எம்எல்ஏ பியாப்பு மதுசூதன ரெட்டி (Biyyapu Madhusudhan Reddy) கோயில் கட்டியுள்ளார்.
இந்தக் கோயிலுக்கு பின்னால் ஜெகன்னா ஹவுஸிங் காலனி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நவரத்தனலு திட்டம் ஜெகன் மோகன் ரெட்டியின் கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் நோக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை மேம்படுத்துவது ஆகும். இந்தக் கோயில் குறித்து எம்எல்ஏ பியாப்பு மதுசூதன ரெட்டி கூறுகையில், “ஜெகன் மோகன் ரெட்டியின் நவரத்தினலு திட்டத்துக்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்படுகிறது. ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் அமைத்து கொடுப்பதில் அவர் பல முதலமைச்சர்களை மிஞ்சியுள்ளார்.
இக்கோயில் கட்டடப் பணிகளில் தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த வல்லுநர்கள் ஈடுபட்டனர். இந்தக் கோயிலில் சில நுட்பமான கண்ணாடி வேலைகளும் செய்யப்பட்டுள்ளன. ஜெகன் மோகன் ரெட்டியை தீவிரமாக பின்தொடர்ந்துவருகிறேன். எனது சிறிய முயற்சிதான் இது. கோயில் கட்ட எனக்கு முதலில் திட்டம் எதுவும் இல்லை.
ஏழை எளிய மக்களுக்கு நவரத்தினலு திட்டம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உறுதியளிக்கிறது. இதுதான் என்னை ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டத் தூண்டியது” என்றார்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள கோயிலில் உண்டியலுக்கு பதிலாக புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரோனா மாதா கோயில் - படையெடுக்கும் மக்கள்!