நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூரில் பராஷாஹித் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'ரொட்டித் திருவிழா' கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் படைகளுடனான போரில் உயிரிழந்த 12 வீரர்களின் நினைவாக, மொஹரம் மாதத்தில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மக்கள் ஒருவருக்கொருவர் ரொட்டிகளை பரிமாறிக் கொள்வார்கள்.
இங்கு ரொட்டி கொடுத்து வேண்டிக்கொண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது. செல்வம், கல்வி, வேலை, சொந்த வீடு, உடல்நலம் அல்லது திருமணம் போன்றவற்றை வேண்டி ஒரு ரொட்டியினை இங்கிருந்து எடுத்துக்கொள்வது வழக்கம். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள், கண்டிப்பாக வந்து இங்கு ரொட்டியை விட்டுச்செல்ல வேண்டும். இதனால் இங்கு ஒருமுறை வந்த பக்தர்கள் மீண்டும் வரவேண்டிய நிலை உள்ளது.
அனைத்து மதத்தினரும் இந்த திருவிழாவில் கலந்துகொள்கிறார்கள். இந்த திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ரொட்டித் திருவிழாவின் போது, பல தொண்டு நிறுவனங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகின்றனர். திரைப்பட நடிகர் சோனுசூட் வைத்திருக்கும் தொண்டு நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்ததால், இந்த ஆண்டு ரொட்டித் திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ரொட்டிகளைப் பரிமாறி மகிழ்ச்சியைத்தெரிவித்தனர். அங்குள்ள ஸ்வர்ணலா ஏரியில் படகு சவாரி செய்தும், கடைத் தெருக்களில் பொருட்கள் வாங்கியும் உற்சாகமாக திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். மக்கள் கூட்டம் அலைமோதுவதால், சுமார் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வயலில் களை எடுக்கும்போது கிடைத்த வைரம் - விவசாயிக்கு அடித்த யோகம்!