அகோலா : மகராஷ்டிராவில் ஒரு சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாகக் கூறி, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட கலவரத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டும், 8 பேர் படுகாயமும் அடைந்தனர்.
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அகோலா நகரில் இரு தரப்பினரும் தங்களுக்குள் கலவரத் தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டனர். கல்வீச்சு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் பொதுச்சொத்துகள் பல சேதமானதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீதிகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடனும் பொது மக்கள் வலம் வந்தது மற்றும் கல்வ்வீச்சு சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாகப் பரவியது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதை அடுத்து குறிப்பிட்டப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு, வெளியேற வேண்டாம் என அறிவுறுத்திய போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைதளத்தில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துப் பதிவிட்டதாக, மற்ற சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கிய நிலையில், அது சமூகப் பிரச்னையாக மாறி, இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதலை உருவாக்கியதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இரவு நேரத்தில் இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரைத் தேடி வருவதாகப் போலீசார் கூறினர்.
ஒரு மதத்தின் தலைவரை மோசமாக சித்தரிக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதவி வெளியிடப்பட்டதே இந்த கலவரத் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் எனப் போலீசார் கூறினர். அகோலா நகருக்கு அருகில் உள்ள அமராவதியில் பதற்றத்தை தணிக்க ஆயிரம் ரிசர்வ் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரான முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், கலவர நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கலவரத்தின் தீவிரத்தன்மை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க : Karnataka முதலமைச்சர் யார்? என்ன நடக்கிறது - முழுப் பின்னணி!