ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டசபை பிரதிநிதிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா உருவாக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்யில் உள்ளது. இதனால் ஆட்சியைத் தக்க வேண்டும் என பிஆர்எஸ் மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
மேலும், பிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என காங்கிரசும் கடுமையாகப் போட்டி போட்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை குறிவைத்து பல்வேறு வாக்குறுதிகளை அரிவித்து உள்ளது. மேலும், தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கவும் செய்தார்.
மேலும், தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சிகள் போட்டி போட்ட நிலையில், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். இதனால் தெலங்கானாவில் ஒய்எஸ்ஆர் பிரிக்கக் கூடிய ஓட்டுகளும் காங்கிரசுக்கு கிடைப்பதர்கான சூழல் உருவானது.
மேலும், தென் இந்தியாவில் ஆட்சியை இழந்த பாஜக தெலங்கானாவில் வெற்றி பெற்று தென் மாநிலங்களில் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜகவின் தேசிய தலைவர்கள் பலரும் தெலங்கானாவில் தொடர்சியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் மக்தலில் நடந்த பேரணியில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர், “சந்திரசேகர் ராவை ஆட்சியில் இருந்து அகற்ற நினைத்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அந்த பழம்பெரும் கட்சியின் எம்எல்ஏக்கள், பிஆர்எஸ் கட்சிக்கு செல்வார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கும், பிஆர்எஸ் கட்சிக்கும் இடையே இதற்காக ஒரு ஒப்பந்தம் நடந்தது. காங்கிரஸ் இங்கு கேசிஆரை முதலமைச்சராக்கும், கேசிஆர் ராகுல் காந்தியை பிரதமராக்குவார். கேசிஆரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதுதான் ஒரே வழி.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சீன பொருட்கள் போல, உத்தரவாதம் இல்லாதது மற்றும் எப்போது வேண்டுமானாலும் பிஆர்எஸ்-க்கு செல்லும். பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்க பாஜக முடிவு செய்துள்ளது.
மேலும், பாஜக ஆட்சியமைத்தால் தெலுங்கானாவில் எஸ்சி பிரிவைச் சேர்ந்த மதிகா சமூகத்தினருக்கு நேர் ஒதுக்கீடு (vertical quota) வழங்கப்படும் என்றும்” உள்துறை அமைச்சர் கூறினார். மேலும், அயோத்தியில் ராமர் கோயிலில் இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாக பாஜக வாக்குறுதி அளித்ததையும் ஷா நினைவூட்டினார்.