அலிகார்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்ட பஞ்சாயத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்கள் மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அலிகார் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஜய் சிங் ஜடாவுன் கூறுகையில், உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், என்று தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, காசியாபாத் மாநகராட்சியும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்தது. இருப்பினும், மறுநாள் அந்த உத்தரவை திரும்ப பெற்று, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கூறியது.
உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி கடைகள் இருக்க கூடாது. மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து 50 மீட்டருக்கு அப்பால் இறைச்சி கடைகள் அமைக்கப்பட வேண்டும்.
கடைகளுக்குள் இறைச்சி வெட்டக் கூடாது. இறைச்சி வெளியில் தெரியாமல் இருக்க திரைச்சீலைகள், கண்ணாடி கொண்டு மூட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. சைத்ரா நவராத்திரி பண்டிகை வட இந்தியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை.
இந்தாண்டு சைத்ரா நவராத்திரி பண்டிகை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்களுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
இதையும் படிங்க: கேரளாவின் 'சில்வர் லைன்' திட்டத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் எதிர்ப்பு