நொய்டா: நாட்டில் பல்வேறு விதமாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சைபர் கும்பல், ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் அரியவகை மூலிகையை தருவதாக ரூ.1.80 கோடியை மோசடி செய்துள்ளனர். இதனையடுத்து நொய்டா சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதன் மூலம் ஏக் உஃபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய மூன்று நைஜீரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடம் இருந்து பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்டை வைத்துள்ளதற்கான காரணம் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், “கைது செய்யப்பட்ட நைஜீரியர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற எந்தவொரு ஆவணமும் இல்லை. இவர்கள் மேட்ரிமோனியல் இணைய தளங்கள் மற்றும் டேட்டிங் ஆப் மூலமும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அபோட் பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.” என்று நொய்டா 3வது மண்டலத்தின் காவல் துறை துணை ஆணையர் அபிஷேக் வர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யூடியூபில் காய்கறி விளம்பரம் - ரூ.1.10 லட்சத்தை பறிகொடுத்த வியாபாரி