போபால்: மத்திய பிரதேசத்தில் 2023ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மத்தியப்பிரதேசத்தில் தங்களது கட்சியைப் பலப்படுத்துவதற்காக ஏஐஎம்ஐஎம் நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கியமான ஒன்று பிரியாணி வழங்குவது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நரேலா சட்டமன்றத்தொகுதியில் ஏஐஎம்ஐஎம் நிர்வாகி பீர்சாதா தவுக்கீர் நிஜாமி, தங்களது கட்சியில் புதிதாக சேர்பவர்களுக்கு பிரியாணி வழங்கினார். தங்களது கட்சியில் சேர்பவர்களை விருந்தினர்கள்போல பிரியாணி வழங்கி உபசரிப்பதாகவும், இந்த முயற்சியால் 20,000க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சியில் சேர்ந்துள்ளனர் என்றும் நிஜாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு மத்தியப்பிரதேசத்தில் வாக்காளர்களைக்கவர ஹைதராபாத் பிரியாணியை வழங்க ஏஐஎம்ஐஎம் கட்சித்தலைவர் ஒவைசி முடிவு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரியாணி வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக ஹைதராபாத்திலிருந்து சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் குறைந்தபட்சம் 10 விழுக்காடு இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தில் உள்ள 24 சட்டமன்றத்தொகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இருப்பதாகத்தெரிகிறது. இதில் காங்கிரஸின் வாக்குவங்கியாக இருந்த இஸ்லாமியர்கள் தற்போது ஏஐஎம்ஐஎம்மின் பக்கம் சாய்ந்துள்ளனர். இந்தச்சூழலை பயன்படுத்தி மத்தியப்பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்த ஒவைசி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே பிரியாணி வழங்கும் வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெளியானது புனீத் ராஜ்குமாரின் ஆவண திரைப்படம் ; ரசிகர்கள் ஆரவாரம்