உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி அங்கு களம் காண்கிறது. அம்மாநிலத்தில் ஒவைசி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரில் ஒவைசி காரில் சென்று கொண்டிருந்த போது அவரது கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது காரில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிடிசிடிவி மூலம் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மக்களவையில் உரையாற்றிய ஒவைசி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், எனக்கு Z பிரிவு பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. என்மீது குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டால் அதை நான் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். நாட்டில் ஏழைகள் பிழைத்தால் மட்டுமே, நான் பிழைத்து வாழ முடியும். இந்த பாதுகாப்புக்கு பதிலாக நாட்டில் மத நல்லிணக்கம் உருவாகி, வெறுப்புணர்வு பரவுவது நிற்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என ஒவைசி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூறினார்.
மேலும், நான் எனது பாதையை பயந்துபோய் கைவிட மாட்டேன். இந்த சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச மக்கள் உரிய பதிலை தேர்தலில் வழங்குவார்கள் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திருவள்ளுவர், சானக்கியா ஆகியோரிடம் பாடம் படிக்கும் இந்திய ராணுவம்