டெல்லி : அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலையை பிரதமர் மோடி சுமந்து செல்கிறார். பின்னர் ராமர் சிலை கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. கோயிலுக்கான மணி, பூஜை பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பக்தர்கள், பொது மக்கள் தொடர்ந்து காணிக்கையாக வழங்கி வருகின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பல்துறை ஜாம்பவான்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் ராமர் கோயில் திருவிழா தனிக் கவனம் பெற்று உள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ், இல்லினாய்ஸ் உள்ளிட்ட 10 மாகாணங்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை குறிக்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பில்போர்டுகள், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் பல நாடுகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் மொரிஷியஸ் நாட்டு அரசு ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் குறிக்கும் பூஜைகளில் பங்கேற்கும் வகையில் அந்நாட்டில் பணிபுரியும் இந்து மதத்தை சேர்ந்த பொது ஊழியர்களுக்கு இரண்டு மணிநேர சிறப்பு விடுமுறை வழங்க மொரிஷியஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மொரிஷியஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, சேவைத் தேவைகளுக்கு உட்பட்டு, இந்து மத பொது அதிகாரிகளுக்கு 2024 ஜனவரி 22 திங்கட்கிழமை இரண்டு மணிநேர சிறப்பு விடுமுறையை வழங்க அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொரிஷியஸ் நாட்டில் பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்து மதத்தினர் தங்கி வருகின்றனர். அங்கு இந்து மதம் மிகப்பெரிய மதமாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொரிஷயசில் சுமார் 48 புள்ளி 5 சதவீத மக்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக கார்கே தேர்வு! கூட்டணியிலும் ஆதிக்கம் செலுத்துகிறதா காங்கிரஸ்?