ஹைதராபாத் (தெலங்கானா): தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மே 28ஆம் தேதி 17 வயது சிறுமியை 5 பேர் சொகுசு காரில் வைத்து, பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதுதீன் மாலிக் என்பவர் உள்பட மூன்று சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மற்றொரு நபரான உமர் கானிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஜூபிலி ஹில்ஸ் காவல் துறையினர் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பப் பார்ட்டி குறித்து முன்கூட்டியே அறிந்து அங்கு வந்து சிறுமியிடம் பழகி, அவரை வீட்டில் விட்டுவிடுவதாகக்கூறி காரில் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமி, அவருடைய தோழி ஹைதராபாத்தில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு சதுதீன் மாலிக், சிறுவர்கள் உள்ளிட்டோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உணவு அருந்தி விட்டு சிறுமி, தோழி வீட்டிற்கு கிளம்பும்போது, சதுதீன் மாலிக், சிறுவர்கள் கும்பல் தாங்கள் காரில் வீட்டில் கொண்டு சென்றுவிடுவதாக கூறியுள்ளனர்.
சிறுமி, தோழி அவர்களுடன் காரில் செல்ல ஒப்புக்கொண்டு பப்பிலிருந்து கிளம்பும்போது தோழியிடம் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தோழி செல்லவில்லை. சிறுமியிடம் இதுபோன்று நடக்காது எனக் கூறி அவர்கள் நம்பவைத்து காரில் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் பென்ஸ் காரில் அழைத்துச்சென்று பின்னர் வழியில், இன்னோவா காரில் மாற்றி அழைத்து சென்றுள்ளனர். காரில் அழைத்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.
இந்தநிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் மற்றொரு நபரான எம்எல்ஏவின் மகன் காரில் உடன் இருப்பது சிசிடிவியில் தெரியவந்துள்ளது. இதையடுத்து எம்எல்ஏவின் மகன் வழக்கில் 6ஆவது நபராக சேர்க்கப்பட்டு அவர் மீது இன்று (ஜூன் 7) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தவழக்கில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவும் உள்ளனர். இதனால் தெலங்கானாவின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ மகன் கைது?