பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்த நாகேஷ், கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அப்பெண் மீது திராவகம் (ஆசிட்) வீசியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார், தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தனியார் ஆசிரமத்திலிருந்து நாகேஷ் நேற்று (மே13) கைது செய்யப்பட்டார்.
நாகேஷை கர்நாடகா அழைத்து சென்றபோது, பெங்களூரு புறநகர்ப்பகுதியான கெங்கேரியில் சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்தும்படி கேட்டுள்ளார். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு நாகேஷ் தப்பியோட முயன்றதாகவும், இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிகிறது.
நாகேஷ் தாக்கியதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் சுட்டதில் நாகேஷுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகேஷ் கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: பெண் மீது ஆசிட் வீசிவிட்டு, திருவண்ணாமலையில் சாமியாராக சுற்றித்திரிந்த இளைஞர் கைது!