பிரதாப்கர் : உத்தர பிரதேசத்தில் டெம்போ மீது டேங்கர் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் விக்ரம்பூரில் இருந்து, டெம்போ வாகனத்தில் 15 பேர் பிரதாப்கர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். மோகன்கஞ்ச் மார்க்கெட் அருகே டெம்போ வாகனம் சென்று கொண்டு இருந்தது.
அதேபோல், எரிவாயு டேங்கர் வாகனம் ஒன்று மோகன்கஞ்ச் மார்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் எதிர்திசையில் வந்த டெம்போ வாகனம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் டெம்போ வாகனத்தில் பயணித்த 8 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நிகழ்விடத்தில் மீட்பு பணியில் ஈடுபட அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் எரிவாயு டேங்கரில் எந்த வித சேதாரமும் ஏற்படாததால் பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லி அவசர சட்டம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவு!
முன்னதாக, தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் சுபாஷ் பிரசாத் கர்வார் மற்றும் விபின் குமார் கவுதம் என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இருவரும் ஜவுன்புர் மாவட்டம் மரியஹூ அருகே குடியிருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.
இருவரும் ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது, இந்திரா மில் ரயில்வே கிராசிங்கில் வாரணாசி - லக்னோ ரயில் மோதி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களில் அப்பாவி மக்கள் 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Manipur violence: தொடரும் வன்முறை.. மீளா துயரம்... துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி