கண்ணூர் (கேரளா): திண்டுக்கல் மாவட்டம் பழனியில், கேரள பெண் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானதாக புகார் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், புகார் அளித்த தர்மாராஜிடமும் விசாரணை மேற்கொள்ள பழனி காவல் கூடுதல் துணைத் தலைவர் சந்திரன் தலைமையிலான மூன்று தனிப்படை கேரளா தலச்சேரிக்கு சென்றுள்ளது.
இந்த தனிப்படை, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளது. இதன்பின்னர், தலச்சேரி காவல் உதவி ஆணையர் மூசா வள்ளிக்கடன் உடன் தமிழ்நாடு தனிப்படையினர் ஆலோசனை நடத்தினர்.
தலச்சேரியில் தொழிலாளியாக பணிபுரியும் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண், தன்னுடைய கணவருடன் பழனிக்கு சென்றுள்ளார். அந்த பெண் ஜூன் 19ஆம் தேதி கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் தலச்சேரி அரசு மருத்துவமனையில் உடலில் பல காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சம்பவமே நடைபெறவில்லை: பழனி பாலியல் வன்முறை விவகாரத்தில் புதிய திருப்பம்!