டெல்லி : பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், அனைத்து தரப்பினருடன் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது.
அண்மையில் மத்திய பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வெவ்வேறு விதிகளை கொண்டு ஒரு குடும்பம் செயல்பட முடியுமா என்று தெரிவித்த பிரதமர் மோடி அதேபோல் தான் நாட்டை இயக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அரசியலைமைப்பு அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்வதாகவும் அதில் இரண்டு சட்டங்களை கொண்டு இயக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் சிலர் தங்களது சுயநலத்திற்காக சிலக் குழுக்களை தூண்டி விடுவதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார். அவர்கள் உண்மையில் இஸ்லாமயர்களுக்கு ஆதரவாக இருந்தால், இஸ்லாமிய சகோதரர்கள் ஏழைகளாகவோ அல்லது பின்தங்கியவர்களாகவோ இருந்திருக்க விட்டு இருக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிதுரைத்த போதும் வாக்கு வங்கிக்காக எதிர்க் கட்சிகள் அரசியல் செய்வதாக மோடி கூறினார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அதேநேரம் மதம், இனம் என அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என தலைநகர் டெல்லியை ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது. இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் சந்தீப் பதாக், "ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவாக இருக்கிறது. 44வது சட்டப்பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது.
ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அனைத்து மதத்தினரிடம் இருந்தும், அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெற வேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது" என்று கூறினார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரம், அவசரச் சட்டம், முதலமைச்சர் மாளிகை புனரமைப்பு பணியில் மோசடி எனக் கூறி இந்திய தலைமை கணக்கு தணிக்கைக் குழு தலைவர் விசாரணை என ஆம் ஆத்மி கட்சிக்கு மத்திய அரசு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வரும் போதிலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் முன்மொழிவுக்கு அக்கட்சி ஆதரவு அளித்து இருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : "இரண்டு சட்டங்களைக் கொண்டு நாட்டை இயக்க முடியாது"- பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு