அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத் அடுத்த அமரைவாடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர், தனக்கு திருமணமாகி முதல் 5 ஆண்டுகள் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்ததாகவும்; இந்நிலையில், திடீரென மனைவி தன் தாய் வீட்டருகே குடியேறுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப வீடு மாறிய நிலையில், மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாக கணவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்கும் சம்பளப் பணத்தை சூதாட்டம் உள்ளிட்ட வழிகளில் மனைவி செலவழித்து வந்ததாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேட்டதற்கு இருவரிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து தனிக் குடித்தனம் வந்ததாகவும், தனக்கு ஜீவனாம்சம் தரக்கோரி மனைவி வழக்கு தொடர்ந்ததாகவும் கணவர் கூறியுள்ளார். வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இருவரும் சமரசம் செய்து மீண்டும் சேர்ந்து வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியில் மனைவி போலியான தகவல்களை கொடுத்து ஆதார் அட்டை வாங்கி, அதைக் கொண்டு அருகிலுள்ள மருத்துமனையில் கணவரான தன் கையெழுத்தை போலியாக போட்டு கருமுட்டையை விற்று வந்தது தெரிய வந்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேட்டதற்கு மனைவி மற்றும் அவரது தாயார் தாக்கியதாகவும், மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். கணவர் அளித்தப் புகாரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - பிரதமர் மோடி