பெங்களூரு: நேற்றைய முன்தினம் இரவு 11.30 மணியளவில், கர்நாடக மாநிலம் டொம்மலூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பை எடுத்ததும், இன்னும் சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது என்று கூறிவிட்டு, அழைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உள்ளூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 12 மணியளவில் வெடிகுண்டு நிபுணர் அடங்கிய குழு, மோப்பநாய் குழு மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு வைத்ததற்கான தடயங்கள் இல்லாததால், அந்த அழைப்பு போலியான ஒன்று என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, போலியான தகவல் அளித்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தேசிய புலனாய்வு முகமையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர், பெங்களூருவில் இருந்து சித்தூரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவர் சித்தூரில் இருந்து தன்னூருக்கு வரும்போது, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கோலார் மாவட்டத்தின் முல்பகிலு தாலுகாவில் உள்ள வதஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், பெங்களூருவில் இருந்த பாஸ்கர், கூகுளில் என்ஐஏ கட்டுப்பாட்டு எண்ணைக் கண்டறிந்து, ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கூறியது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பாஸ்கரிடம் விதானா சவுதா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, பெங்களூரு நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலருடன் ஓடிய மகள்..காதலனின் தாயாரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த 7 பேர் கைது - கர்நாடகாவில் நடந்த கொடூரம்