பெங்களூரு: கர்நாடகா மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்தவர் பவன் கல்யாண். அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி தனியார் கல்லூரியில் எம்.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
மாணவி படிக்கும் கல்லூரிக்கு நேரடியாக சென்ற பவன் கல்யாண், தன் காதல் ஆசையை தெரிவித்துள்ளார். காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை பலமுறை குத்தியுள்ளார்.
மேலும் அதே கத்தியால் தன்னைத் தானே பவன் கல்யாண் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தை கண்ட கல்லூரி காவலாளிகள் மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பவன் கல்யாண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் அணியத் தடை" - பஞ்சாப் அரசு