கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் உயிரிழந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்ய மத்திய குழுவினர் கேரளா விரைந்து உள்ளனர். இவர்களுடன் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்களும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தொற்று பாதித்த இடங்களுக்கு சென்றும் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிபா வைரஸ் தொற்று கண்டறிவதை தீவிரப்படுத்தும் விதமாக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்தில் இருந்து இரண்டு நடமாடும் ஆய்வக வாகனங்கள் கோழிக்கோட்டிற்கு வர வைக்கப்பட்டுள்ளன.
அதில் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவமனையில் தனி வார்டுகள் தொடங்கப்பட்டு உள்ளன. வருகிற 24ஆம் தேதி வரை அம்மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் சென்டர் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரி உள்ளிட்டவைகள் திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோழிக்கோட்டில் 2 ஆயிரத்து 133 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதில் 357 நபர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் தனி பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிபா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களுக்கு செல்பவர்கள் முககவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த வருகிற 24ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Today Gold price: 3 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம்: எவ்வளவு தெரியுமா?