பெங்களூரு : கர்நாடகாவில் யூ டர்ன் திரும்பிய கார், சாலையோரம் நின்ற பாதசாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜ்குமார் சாலையில், முதியவர் சென்று கொண்டு இருந்த நிலையில், அதே சாலையில் யூ டர்ன் எடுத்து கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியதாக கூறப்படுகிறது. சாலையோரம் சென்று கொண்டு இருந்த முதியவர் மீது பலமாக மோதிய கார், தூக்கி வீசப்பட்ட அவர் மீது ஏறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோர விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில், வாகன ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் சடலத்தை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார்.
மேலும், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விபத்தில் ஈடுபட்ட காரின் நம்பரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விபத்து அரங்கேறிய அடுத்த சில மணி நேரங்களில் விபத்தில் ஈடுபட்டவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயது முதியவர் கிருஷ்ணப்பா பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பழைய இரும்பு கடையில் கிருஷ்ணப்பா பிரகாஷ் பணியாற்றி வந்தததாகவும், அவரது உறவினர் கண்டறியப்பட்டு சடலத்தை ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : ஈரானில் தமிழக மீனவர்கள் கைது! எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு!