கரோனா தொற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இளங்கலை, முதுகலை படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதேபோல், கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் பள்ளிகள் செயல்பட்டன.
இந்நிலையில் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள், இன்று முதல் முழு நேரமும் செயல்படும் என்றும், வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12 ஆம் வகுப்புகள் செயல்படும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் முழு நேர வகுப்புகள் தொடங்கின.
இதனிடையே, ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பால் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று மீண்டும் தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழிசை பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கரோனா தொற்று இருக்கும் நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் நடத்தலாமா, தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யலாமா என்பது குறித்து பெற்றோருடன் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாய்ப்பே வழங்காமல் மருத்துவ சீட்டை மறுத்ததாக வந்த கடிதம்! - மாணவி அதிர்ச்சி!