மகாராஷ்டிரா: கட்டாய ஆட்சேர்ப்புத் தேர்வில், போலியான தேர்வர்களை கொண்டு தேர்ச்சி பெற்று, வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராஃபர்களாகவும், மல்டி டாஸ்கிங் பணியாளர்களாகவும் பணியில் சேர்த்ததாக, 12 ஊழியர்கள் மீது, நாக்பூரில் உள்ள மத்திய புலனாய்வு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த 2018-ல் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதுகுறித்த விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைரேகை, கையொப்பங்கள் மற்றும் கட்டைவிரல் பதிவுகள் அடங்கிய தேர்வுத் தாள்கள் மற்றும் பிற ஆவணங்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
அதில், 12 பேரில் ஒன்பது பேர் மேற்கூறிய சோதனைக்கு வரவில்லை எனவும், ஒன்பது பேரும் அவர்களுக்குப் பதில் போலியான தேர்வர்களை கொண்டு தேர்வு எழுதியதாக ஆய்வில் தெரியவந்ததாகவும் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.
இந்த வழக்கு சிபிஐ உதவி ஆய்வாளர் சலீம் கான் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் உயர் பதவிகளில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் ஒன்பது பேரையும் கைது செய்த மத்திய புலனாய்வு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், அவர்களை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டிசம்பர் 16 வரை நீதிமன்றக் காவலில் எடுத்துள்ளனர்.