ஜபல்பூர்: ஆசைக்கும், முயற்சிக்கும் வயது ஒரு தடையில்லை என்று பழமொழி ஒன்று உண்டு. மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் சாந்தி பாய் என்ற 81 வயது மூதாட்டி அந்தப் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். தற்போதைய இளைஞர்களால்கூட முடியாததை சாந்தி பாய் துணிந்துசெய்கிறார்.
இந்த மூதாட்டி நாள்தோறும் 20 லிருந்து 22 கி.மீ. வரை சைக்கிளில் பயணம்செய்கிறார். சாந்தி பாய்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருப்பினும், அவர் யாருடனும் இல்லாமல் தனியாக வசித்துவருகிறார்.
9 மணிநேரம் உழைப்பு
பல வீடுகளில் பணிபுரிந்துவரும் சாந்தி பாய், நாள்தோறும் காலை 8 மணிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்குப் பணியை நிறைவுசெய்கிறார். இதற்காக, நாள்தோறும் 20 லிருந்து 22 கி.மீ. வரை சைக்கிளில் செல்வதாகக் கூறும் சாந்தி பாய், சோர்வாக உணர்ந்தால் சாலை ஓரத்தில் சற்று ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்குவேன் எனச் சாதரண குரலில் சொல்கிறார்.
இந்த வயதிலும் அவர் கண்ணாடி அணிவதில்லை. கண்பார்வையிலும் எந்தக் குறைபாடும் இல்லை. யாருக்கும் எந்தத் தொந்தரவு அளிக்கக் கூடாது என்ற வைராக்கியத்தில் சாந்தி பாய் வாழ்ந்துவருகிறார்.
மனநிம்மதியே முக்கியம்
சைக்கிள் அழுத்துவது உடல்நலனுக்கு மட்டுமல்ல மனநலனுக்கும் நல்லது. அதனால்தான் சாந்தி பாய் உடல் ஆரோக்கியத்துடன் சேர்ந்து மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மன அழுத்தம், கோபம், விரக்தி போன்றவை இக்கால இளைஞர்களிடம் பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. ஆனால், இதையெல்லாம் கடந்து வாழ்வின் ஓட்டத்துடன் தனது சைக்கிள் ஓட்டத்தையும் சாந்தி பாய் மேற்கொள்கிறார்.
தன்னைப் பற்றி சாந்தி பாய் கூறுகையில், "நான் படிக்கவில்லை. ஆனால், படித்தவர்களைவிட எனது மனநிலை மகத்தானது" என்கிறார் மென்புன்னகையுடன்.
இதையும் படிங்க: மாணவிக்கு வலுக்கட்டாய சோதனை: தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது