பிகார் மாநிலம், நாலந்தா மாவட்டம் ஹில்சா பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர், பாட்னாவில் உள்ள என்டிபிசி. காலனியில் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்நபர், நோயின் தீவிரம் அதிகமாகவே உயிரிழந்தார்.
இதனை அறியாத அவரது மகள் தந்தை எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில், அவர் அருகே காத்திருந்தார். உதவ ஆள் யாரும் இல்லாததால், அப்பாவி சிறுமி தந்தையின் சடலத்துடன் இரு நாள்களை கழித்துள்ளார்.
இந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் கொடுத்தத் தகவலின் அடிப்படையில் சிபிஐ(எம்.எல்) மாநில கமிட்டி உறுப்பினர் ரன்விஜய் குமார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தார்.
ஆனால் அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்பு குழு, உயிரிழந்தவரின் உடலை மீட்டதாக சிபிஐ(எம்.எல்) சட்டப்பேரவை உறுப்பினர் ரவிதாஸ் தெரிவித்துள்ளார்.