பெங்களூரு (கர்நாடகம்): அறிகுறியற்ற கரோனா தொற்று கொண்டிருந்தவர்கள், தொடர்ந்து மரணித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கரோனா தொற்றினால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க மக்கள் தங்களுக்கு கரோனா தொற்று இருப்பதை அறியாமலேயே உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில அரசு இது குறித்த பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஐந்து தினங்களில் மட்டும் கரோனா தொற்று இருப்பதை அறியாமல், அறிகுறியற்று இருந்த 790 பேர் உயிரிழந்துள்ளனர் எனும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கையில், "புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் தொற்று மிகவும் ஆபத்தானது. இது ஆர்.டி.பிசிஆர் பரிசோதனைகளில் கூட வெளி தெரிவதில்லை. இது நேரடியாக நுரையீரலைத் தாக்கக் கூடியது. இதனை சிடி பரிசோதனை மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்" என்று கூறியுள்ளனர்.