ஆங்கிலேயர்கள் ஆட்சியில், இந்திய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த அடக்குமுறைக்கு எதிராக பல விடுதலை வீரர்கள் புரட்சிக்குரலாய் ஒலித்தனர். அவர்களில் ஒருவர்தான் பத்ரி தத் பாண்டே.
1882ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பிறந்த இவர் அங்குள்ள மலைப்பகுதியில் நடைமுறையிலிருந்த கூலி-பேகார் முறையை தனது தளராதப் போராட்டத்தால் நீக்கினார். இந்தக் கொடுமையான நடைமுறையை நீக்கியதற்காக பத்ரி தத் பாண்டே, குமோன் கேசரி என அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஆங்கிலேயர்கள் தங்களின் உடைமைகளை உள்ளூர் மலைவாழ் மக்களை வைத்து சுமந்து செல்லும் கூலி-பேகார் என்ற நடைமுறைக்கு எதிராக மக்களைத் திரட்டினார் பத்ரி தத். ஒரு போராட்டக் கூட்டம் பத்ரி தத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.
அதை கலைக்க ஆங்கிலேய அரசு காவல்துறைக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் திரண்டதால் காவல்துறை அச்சப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. காவல்துறை துணை ஆணையர் பத்ரி தத்தை அழைத்து மிரட்டினார். ஆனால் பத்ரி தத் பின்வாங்கவே இல்லை.
மக்கள் போராளி பத்ரி தத் பாண்டேக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்தப் பதக்கங்களை 1962ஆம் ஆண்டு சீன போர் நிதிக்கு வழங்கினார். கூலி பேகார் முறை ஒழித்த இவருக்கு குமோன் கேசரி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை ரத்தமில்லா புரட்சி என அண்ணல் காந்தி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தனது யங் இந்தியா இதழிலும் இது குறித்து காந்தி எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல்