ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய நாட்டின் முதல் பெண் ராணி சென்னம்மா. சுதந்திரம் மற்றும் சுய மரியாதைக்கு எடுத்துக்காட்டு சென்னம்மாதான். தோலப்ப கௌடா மற்றும் பத்மாவதி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த சென்னம்மா, கிட்டுரைச் சேர்ந்த மல்லசராஜாவை 1782ஆம் ஆண்டு மணம் புரிந்தார். 1816ஆம் ஆண்டு மல்லசராஜா மரணமடைந்தவுடன், அவரது சகோதர வழி உறவான சிவலிங்க சர்ஜனா என்பவர் அரியணை ஏறினார். அவரும் சிறிது காலத்தில் மரணமடைந்தார். இந்த சூழலில் ஆட்சிப் பொறுப்பை தானே ஏற்க சென்னம்மா முன்வந்ததும், ஆங்கிலேயர்கள் வாரிசு இழப்புக் கொள்கை மூலம் கிட்டூரை தன்வசப்படுத்தும் முயற்சியில் களமிறங்கினர்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்தார் சென்னம்மா. 1824ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி, தார்வாட் பகுதியில் இருந்து கிட்டூர் நோக்கிப் புறப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஜான் தாக்ரே, கிட்டூர் கோட்டை கதவுகளை உடைத்து நுழைய முற்பட்டார். கிட்டூர் ராணி சென்னம்மா, தனது தளபதி ராயன்னா, பாலப்பா ஆகியோர் தலைமையில் ராணுவத்தை திரட்டி கலெக்டரின் படையை எதிர்த்தார். கலெக்டர் ஜான் கிட்டூர் கருவூலத்தை கைப்பற்ற முயன்றபோது ராணியின் படை ஜானை கொல்கிறது. இதன் நினைவாக அக்டோபர் 23ஆம் தேதி ஆண்டுதோறும் கிட்டூரில் விழா கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது படையெடுப்பில் ராணி சென்னம்மா ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டார். கொரில்லா முறையில் போரிட முயன்ற தளபதி ராயன்னாவும் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ராணி சென்னம்மா 1829ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி காலமானார்.
துலுநாட்டைச் சேர்ந்த உல்லாலா பகுதியின் ராணி அபக்கா தேவி, காலணி ஆதிக்கத்தை வீறுகொண்டு எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர்.
கோவாவை தனது கட்டுக்குள் கொண்டுவந்த போர்த்துகீசியர்கள் 1525ஆம் ஆண்டு மங்களூர் துறைமுகத்தை தகர்த்தனர். இதன் காரணமாக ஐரோப்பாவில் அரிசி, இஞ்சி, கடுகு, மிளகு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரித்தது. அதேவேலை உல்லாலா துறைமுகம் மூலம் ஐரோப்பாவின் தேவையை ராணி அபக்கா பூர்த்தி செய்துவந்துள்ளார். வணிகத்தை தனது கட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர திட்டமிட்ட போர்த்துகீசியர்கள் உல்லால் துறைமுகத்தின் மீது பார்வையைத் திருப்பினர்.
மங்களூரை தனது கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போர்த்துகீசியர்களை, சுமார் நாற்பது ஆண்டுகள் எதிர்த்து நின்றார் ராணி அபக்கா. 1930ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற கனரா புரட்சி, கூட்டா புரட்சி ஆகியவற்றுக்கு விதையாக இருந்தவர் அம்மண்ணைச் சேர்ந்த ராணி அபக்கா.
போரத்துகீசியர்களுக்கு எதிராக யுத்த களத்திலும், நாவாய் களத்திலும் ராணி அபக்கா வீரத்துடன் போரிட்டு வெற்றிபெற்றார். அபக்காவுக்கு மங்களூரைச் சேர்ந்த ராஜா லட்சுணப்பாவுடன் திருமணமானது. இந்த திருமணத்தில் பந்தத்தில் முறிவு ஏற்பட்டு, அபக்கா உல்லாலா திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுணப்பா போர்த்துகீசியர்களுடன் இணைந்து ராணி அபக்காவை நயவஞ்சகமாகத் தோற்கடிக்கிறார். கைது செய்யப்பட்ட ராணி அபக்கா சிறையிலேயே காலமானார்.
அந்நிய சக்திகளுக்கு எதிராக மண்ணுக்காவும் மக்களுக்காகவும் போராடி வீரமரணத்தை தழுவியவர்கள் ராணி சென்னம்மா மற்றும் அபக்கா. அவர்களின் அரண்மணை, கோட்டைகள் வேண்டுமானால் கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கலாம்... ஆனால் அவர்களின் வீரம் சாகவரம் பெற்றவை.