கொச்சி: விவசாயத்தில் நவீன யுக்தியை புகுத்துவது தொடர்பான கண்காட்சியை பார்வையிட விசிட்டிங் விசாவில் சென்ற கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் உளிக்கல் பகுதியைச் சேர்ந்த பிஜூ குரியன், நாடு திரும்பாமல் மாயமானார். அவருடன் சென்றவர்கள் இஸ்ரேல் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டன.
இதனிடையே பிஜூ குரியன், கேரளாவில் உள்ள தன் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தான் நாடு திரும்ப விரும்பவில்லை என்றும், தன்னைத் தேட வேண்டாம் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கேரள தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிஜூ குரியனுடன் பயணித்த அவரது நண்பர் சுஜித் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, "இஸ்ரேலில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதாகவும், இது உள்ளூரில் விவசாய பணிகள் மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிகபட்சம் என பிஜூ குரியன் கூறினார். இஸ்ரேலில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அதை கொண்டு வேலை தேட பிஜூ குரியன் தலைமைறைவானதாக சுஜித் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் சென்ற பெண் உள்பட 6 பேர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பாதிரியர் ஜார்ஜ் ஜோசுவா தலைமையில் 26 பேர் கொண்ட குழுவினர் எகிப்து, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இதில் கடந்த பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்த 6 பேர் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. 6 பேர் மாயமானது குறித்து இஸ்ரேல் போலீசாரிடம் பாதிரியார் ஜார்ஜ் ஜோஸ்வா புகாரளித்துள்ளார். 6 பேரையும் தேடி வருவதாக தெரிவித்த இஸ்ரேல் போலீசார், கண்டுபிடித்தவுடன் இந்தியா அனுப்பி வைப்பதாக பாதிரியரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே புனிதப் பயனத்தை முடித்த சுற்றுலா பயணிகள், கடந்த 19ஆம் தேதி கேரள மாநிலத்திற்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் 6 பேர் மாயமானது குறித்து கேரள டிஜிபியிடம், பாதிரியர் ஜார்ஜ் ஜோசுவா புகாரளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் 6 பேர் மாயமானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வசமான அதிமுக.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி