டெல்லி: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு விகிதம் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக தொடர்ந்து எச்சரித்து வந்த மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தற்போது, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு 85.91 விழுக்காடாக உள்ளது என எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 13 ஆயிரத்து 659 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்திய பாதிப்பில் 60 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் நேற்று இரண்டாயிரத்து 475 பேருக்கும், பஞ்சாப்பில் ஆயிரத்து 393 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 22 ஆயிரத்து 854 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தற்போது நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 126 பேர் கரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.