ஆக்ரா(டெல்லி): இந்த விபத்து குறித்து ஆக்ரா பிரிவு பொது தகவல் அதிகாரி பிரஷாஸ்தி ஸ்ரீவஸ்தவ், “டெல்லி ஷாகுர் பஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து வந்த மின்சார ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு மதுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள 2A பிளாட்பாரத்தில் ஏறியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 5 ரயில்வே ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, 5 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது. டெல்லியில் உள்ள ஷாகுர் பஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து வந்த மின்சார ரயில், தனது ரயில்பாதையை விட்டு, தடம் புரண்டு மதுரா ரயில் நிலையத்தில் 2A என்ற பிளாட்பாரத்தில் ஏறியதோடு, ஒரு கம்பத்தில் மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த வீடியோ என சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவின் நம்பகத்தன்மையை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட லோகோ பைலட் கோவிந்த் ஹரி சர்மா, உதவியாளர் (மின்சாரம்) சச்சின், டெக்னீஷியன்கள் குல்ஜீத் மற்றும் பிரிஜேஷ், ஹர்பன் குமார் ஆகிய 5 பேரை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தலைமை தகவல் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) ஹிமான்ஷு சேகர் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தின்போது ஊழியர்கள் யாராவது குடிபோதையில் இருந்தார்களா, இல்லையா என்பதை அக்குழுவின் அறிக்கை வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகா பந்த்: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை; 44 விமானங்கள் ரத்து.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!